புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாய சங்கங்கள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடர்வதை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி விவசாய சங்கங்கள் நவம்பர் 26 முதல் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் தொடங்கி 4 மாதங்கள் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையொட்டி காசிப்பூரில் டெல்லி - உத்தரப்பிரதேசம் இடையான நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. விவசாய சங்கத்தினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி - அரியானா எல்லையான சிங்கு என்னுமிடத்தில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநிலம் அம்பாலாவில் கிராண்ட் டிரங்க் சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டுள்ளதால் அவ்வழியாக வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
வடக்கு ரயில்வேயின் டெல்லி, அம்பாலா, பிரோஸ்பூர் கோட்டங்களில் 32 இடங்களில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்த வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 4 சதாப்தி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விசாக் உருக்காலையைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.