சிறுவர்களை கடத்தி பாலியல்ரீதியாக துன்புறுத்தி வேட்டையாடு விளையாடு பட பாணியில் கொடூரக் கொலைகள் செய்த இளைஞனை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தடேப்பள்ளி பகுதியில் மெல்லம்புடி மற்றும் வடேஸ்வரம் என இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் சில நாள்கள் இடைவெளியில் காணாமல் போயுள்ளனர். பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டனர். தடேப்பள்ளி போலீசார் சிறுவர்கள் கொலை வழக்கை சவாலாகக் எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். குண்டூர் எஸ்.பி. அம்மிரெட்டி உத்தரவின்படி தனிப்படையினர் களமிறங்கி கோபய்யா என்ற கோபியை கைது செய்தனர். விசாரணையில், கோபிதான் இரண்டு சிறுவர்களையும் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான்.
கோபியிடம் நடத்திய விசாரணயில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி மெல்லம்படி கிராமத்தில் பர்கவ்தேஜா என்ற சிறுவனை கடத்தினேன்.பர்கவ் தேஜாவை, அருகிலுள்ள வயல்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததாக கோபி கூறியுள்ளான். மேலும், வடவேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் பாண்டி அகிலையும் இதே போல கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளான். போலீஸார் சிறுவனை தேடிக் கொண்டிருக்கும் போது, நானும் சிறுவனை தேடுவது போல நாடகமாடினேன். ஆனால், போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு என்னை பிடித்து விட்டனர் என்றும் கோபி கூறியுள்ளான்.
இந்த சம்பவம் குறித்து மெல்லம்புடி கிராம மக்கள் கூறுகையில், கோபிக்கு 14 வயதிலேயே தன்பாலின சேர்க்கையில் ஆர்வம் கொண்டு இருந்தாக சொல்கிறார்கள். அப்போது, மற்றோரு சிறுவனை கோபி கொன்றுள்ளான். பின்னர், சிறுவனின் உடலை அங்குள்ள கால்வாய் பகுதியில் வீசியுள்ளான். ஆனால், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசில் தகவல் சொல்லாமல் கிராம மக்கள் மறைத்துள்ளனர். பலியான சிறுவனின் தந்தையையும் சமாதானப்படுத்தி புகார் கொடுக்காமல் செய்துள்ளனர். கோபியின் தந்தையும் தன் மனைவியை கொலை செய்த வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர். தற்போது, சிறையிலிருந்து வெளி வந்து மற்றோரு பெண்ணை மணந்துள்ளார். இதனால், கோபய்யாவை கண்டிக்கவும் கண்காணிக்கவும் யாரும் இல்லாமல் சைக்கோ போன்ற மனநிலைக்கு மாறியதாக சொல்கிறார்கள்.
இதனால்தான் வேட்டையாடு விளையாடு படத்தில் நடக்கும் கொலைகள் போல, மிகக் கொடூரமாக இரு கொலைகளை கோபி செய்துள்ளார்.
குண்டூர் எஸ்.பி அம்மி ரெட்டி , ''இந்த வழக்கு தொடர்பாக அறிவியல் பூர்வமான தடவியல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும். 90 நாட்களுக்குள் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் விதமாக வழக்கு விசாரணை நடத்தப்படும். கோபியை வெளியே விடுவது இந்த சமுதாயத்துக்கு ஆபத்து. இதனால், அதிகபட்சன தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.