தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் பஞ்சாபில் நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள், திருமணங்கள், அலுவலகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான மாவட்டங்களில் நோய்த்தொற்று வெகுவாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2 மாதங்களுக்குப் பின், பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 800-ஐக் கடந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப அனுப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நோய்த்தொற்று தாக்கம் அதிகரிப்பு மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தக் கூட்டத்தில், மாநில அரசுகள் எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் ஆய்வு செய்வதுடன், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.