இந்தியாவில் தேநீர் எனப்படும் டீ கடை இல்லாத தெருவையும், டீ குடிக்காத இந்தியர்களையும் பார்ப்பது என்பது அரிதான விஷயம். சாமானியர் ஆனாலும் சரி, கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர் ஆனாலும் சரி நம்நாட்டில் விரும்பி குடிக்க கூடிய பானமாக டீ உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் முக்கியமான காரணங்களில் ஒன்று மிக குறைந்த விலையில் கிடைப்பது தான். ஆனால் ஒரு டீயின் விலை 1000 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவை அடுத்த முகுந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தா பிரதீம் கங்குலி. ஏழு வருடங்களுக்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு நிர்ஜாஷ் டீ ஸ்டால் என்று சொந்தமாக டீ கடை ஒன்றை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக இருந்துள்ளது. எதாவது வித்தியாசமாக செய்தால் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்று நினைத்த கங்குலி பல விதமான டீயை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
கங்குலியின் கடையில் ரூ.12 முதல் ரூ.1000 வரை என உலகம் முழுவதிலும் உள்ள 115 வகையான டீக்கள் விற்பனை செய்யப்படுகிறது. 1000 ரூபாய்க்கு விற்கப்படும் ’போ-லே’ டீக்காக போடப்படும் ஜப்பானின் சிறப்பு சில்வர் ஊசி வெள்ளை தேயிலையானது ஒரு கிலோ 3 லட்சம் ரூபாயாம். அதனால்தான் இந்த போ-லே டீயை 1000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கடை உரிமையாளர் பார்த்தா பிரதீம் கங்குலி தெரிவித்துள்ளார்
இந்தியாவின் அறிவிக்கப்படாத தேசிய பானமாய் கருதப்படும் டீயின் விலை ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் தற்போது கொல்கத்தாவின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.