மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான காரணத்தை ஒரே ஒரு புகைப்படம் மூலம் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா உணர்த்தியுள்ளார்.
அண்மை காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜ்ராத், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தினந்தோறும் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திடீரென அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.
மாநில தலைமைச் செயலாளர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிப்பது தொடர்பாக பேசப்பட்டது.
ஆலோசனைக்கு பிறகு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டாயம் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், மீறுவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு புகைப்படம் மூலம் கொரோனா தொற்றுக்கான காரணத்தை கூறியுள்ளார்.
டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, ரயிலில் தூங்கும் நபரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரயிலில் அமர்ந்திருக்கும் அந்த நபர் வாய், மூக்கு பகுதியை மறைக்க பயன்படுத்தும் முகக்கவசத்தை, தனது கண்ணில் ஒளி பட்டு தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக கண்களை மறைக்க பயன்படுத்தியுள்ளார்.
முகக்கவசத்தை கண்களுக்கு அணிந்து தூங்கும் நபரின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, அண்மையில் மும்பையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் இதுவாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.