உலகிலேயே விலை உயர்ந்த வீடாக கருதப்படும் அன்டிலியில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் வசிக்கிறார். சமீபத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது அவரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
சமீபத்தில், மும்பையில் tony Altamount ரோட்டில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வசிக்கும் அன்டிலியா வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் ஸ்கார்பியோ கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. காரின் முன்பக்க இருக்கையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் பெயர் பொறிக்கப்பட்ட பேக் ஒன்று இருந்தது. அதில், இருந்த கடிதத்தில் 'இது டிரெயிலர்தான்' என்று எழுதப்பட்டிருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி, முகேஷ் அம்பானியின் வீட்டை அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியுமா? முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே பெரும் பணக்காரர். இவரின், வீடுதான் இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட வீடும் கூட.
முகேஷ் அம்பானி பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தன் மனைவி நீடாவை காதலித்து திருமணம் செய்தவர். சாதாரண வீட்டில் பிறந்த நீடா மிகச்சிறந்த நாட்டியக் கலைஞர். மும்பையில் ஒரு நவராத்திரி விழாவின்போது நீடாவின் நடனத்தைக் கண்டு முகேஷின் தந்தை திருபாய் அம்பானிக்கு பிடித்து போனது. தந்தை மூலம் முகேஷ் அம்பானிக்கு நீடா அறிமுகமாகி பின்னர் காதலாகி கசிந்துருகி திருமணத்தில் முடிந்தது. ஷாஜகான் தன் மனம் கவர்ந்த மும்தாஜ்க்கு தாஜ்மஹால் காட்டியது போல முகேஷ் அம்பானி தன் காதல் மனைவிக்காக 7500 கோடி மதிப்பில் கட்டிய மாட மாளிகைதான் இந்த அன்டிலியா. இந்த வீட்டில் இதில் 27 மாடிகள் உள்ளன. 570 அடி உயரத்தைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் சில தளங்கள் சராசரி உயரத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு உயரம் கொண்டவை. இதனால், கிட்டத்தட்டட 40 மாடிகள் உயரத்துக்கு இந்த வீடு உயர்ந்து காணப்படுகிறது. 400,000 அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஆன்டிலியாவில் 50 பேர் அமர்ந்து படம் பார்க்கும் தியேட்டரும் உண்டு. பிரமாண்ட நீச்சல் குளங்கள், ஸ்பா போன்றவையும் வீட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன.
இந்த வீட்டில் அம்பானி குடும்பத்தார் 6 பேர் வசிக்கிறார்கள். விருந்தினர்களுக்கு தங்கவே பல அறைகள் உள்ளன. அம்பானிகள் சுத்தமான சைவ சாப்பாடுதான் சாப்பிடுகிறார்கள். விருந்துகளில் கூட சுத்த வெஜிடேரியன்தான். காக்டெயில் சமயங்களில் கூட ஒயின் மட்டுமே பரிமாறப்படுமாம். அம்பானி குடும்பத்தாருடன் சேர்ந்து இந்தச் சொகுசு மாளிகையை பராமரிக்க 600 பணியாளர்கள் வசிக்கிறார்கள். பணியாளர்கள், பாதுகாவலர்கள், பிற ஊழியர்கள் ஓய்வெடுக்க தனியாக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டில் மட்டும் ஒன்பது லிஃப்ட்கள் உள்ளது. குடும்பத்தார், விருந்தாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு தனித்தனி லிஃப்ட்களை பயன்படுத்த வேண்டும்.
இந்த வீட்டின் இன்னோரு சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு தளத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றொரு தளத்தில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான். இதனால், ஒவ்வோரு தளமும் புதுவித அனுபவத்தை குடும்பத்தினருக்கும் விருந்தினருக்கும் கொடுக்கும். இந்தக் கட்டடத்தில் தனியாக ஐஸ் அறை உள்ளது. வெயில் காலங்களில் குடும்பத்தினர் இந்த அறையை பயன்படுத்துகிறார்கள். ஆன்டிலியாவில் மூன்று ஹெலிபேட் உள்ளது. முதல் 6 மாடிகள் முற்றிலும் கார்கள் நிறுத்தும் பகுதியாகும். இதில், 168 கார்களை பார்க் செய்ய முடியும். மேலும் ஹெலிகாப்டர்களுக்காக கட்டுப்பாடு மையத்தைக் கொண்டுள்ள ஏர் ஸ்பேஸ் தளமும் உள்ளது. 8 ரிக்டர் ஸ்கேல் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டாலும் அன்டிலியா அசைந்து கொடுக்காது .
முகேஷ் அம்பானிக்கு சி.ஆர்.பி.எப் கொடுக்கும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருக்கிறது. இவரின், மனைவிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 58 பாதுகாப்பு படை வீரர்கள் சுழல்முறையில் அம்பானி குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குகிறார்கள். இவர்களிடத்தில் நவீன ஆயுதங்களும் உண்டு. இது தவிர, அம்பானியின் தனக்கென்று தனியாக நியமித்துள்ள பாதுகாவலர்களும் சுழற்முறையில் பணியில் இருப்பார்கள். இவர்களிடத்தில் ஆயுதங்கள் இருக்காது. இவர்கள் அனைவரும் இந்திய தேசிய பாதுகாப்புப்படை மற்றும் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். ஆயுதமில்லாமல் எதிரிகளை கையாள்வதில் இஸ்ரேல் சென்று தனி பயிற்சி பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இது தவிர அன்டிலியா வீட்டுக்கு மும்பை போலீஸாரும் பாதுகாப்பு வழங்குகிறார்கள். இப்படி, பல பாதுகாப்பு அடுக்குகள் இருந்ததால்தான், ஜெலட்டின் குச்சிகள் இருந்த வாகனத்தை அன்டிலியா வீட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவில் விட்டு விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. வீட்டுக்கு வெளியேவும் முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அம்பானி தன் பயணத்துக்கு புல்லட் புருப் வசதி கொண்ட பி.எம்.டபிள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர் Mercedes AMG G63 ரக மாடல்களை பயன்படுத்துகிறார். இவரின் கான்வாயில், 6 முதல் 8 கார்கள் இடம் பெற்றிருக்கும். இதில், சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் தவிர தனியார் பாதுகாப்பு படையினரும் முன் பின் வருவார்கள்.