தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான கால அட்டவணையை அறிவிக்க உள்ளார்.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் வரும் மே மாதத்துக்குள் முடிவடைகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் கலந்தாய்வு நடத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை நாலரை மணிக்கு டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். அப்போது 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கால அட்டவணையை அவர்கள் அறிவிக்க உள்ளனர்.