புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியதால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து அவர் துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் பதவி விலகல் கடிதத்தை வழங்கினார். பதவி விலகலைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
ஆட்சியமைக்க எதிர்க்கட்சி முன்வராத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும்படி துணைநிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரைத்துள்ளார். இதை ஏற்றுக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.