தமிழகம், கேரளா, புதுச்சேரி,அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் துவங்கியது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் முடிகிறது.
இதேபோல, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கெனவே நேரில் சென்று ஆய்வு நடத்தி முடித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல் முழுவதுமாக விலகாத நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.