நாட்டின் உயரிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான அதிகாரிகளை, இராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி வழங்க கோரி, பிரதமர் அலுவலகத்தின் பெயரில், மோசடி கும்பல் மிரட்டியிருக்கும் அதிர்ச்சி தகவல் சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
போலியாக அரசு ஆவணங்களை உருவாக்கியும், போலியான இ-மெயில் அனுப்பி மோசடி செய்த மைசூரைச் சேர்ந்த மகாதேவய்யா, அங்கித் மற்றும் ஓம் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல், பிரதமர் அலுவலகத்திலேயே பணியாற்றியதாக கூறப்படும் 2 ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடந்தையுடன் நூறு கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது, விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடி பணத்தில், மைசூர் உள்ளிட்ட இடங்களில், செயற்கை அருவியுடன் கூடிய சொகுசு பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை வாங்கி குவித்திருப்பதை, விசாரணையில் கண்டறிந்துள்ள சிபிசிஐடி போலீசார், அவற்றை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாம் தயாரித்ததாக கூறிவரும் மூலிகை பெட்ரோலுக்கு இராமர் பிள்ளை அனுமதி கோரி வருகிறார். இதற்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தான் அனுமதி வழங்க வேண்டும். இதையடுத்து, அந்த மோசடி கும்பல், பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்புவது போல், போலி இ-மெயில் முகவரி மூலம், டி.ஆர்.டி.ஓவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியதாக, சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஏன் இன்னும் அனுமதி வழங்கவில்லை என, DRDO அதிகாரிகளை, மிரட்டியதும், சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர, இராமர் பிள்ளையையும் அந்த கும்பல் ஏமாற்றியுள்ளதா? என விசாரிக்கவும் சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.