காதலனுடன் சேர்ந்து குடும்பத்தினர் 7 பேரைக் கொன்றதற்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சப்னம் மகன் தன் தாயாரை மன்னித்து விடுவிக்கும்படி குடியரசுத் தலைவரிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளான்.
உத்ரபிரதேச மாநிலம் அம்ரோகாவைச் சேர்ந்த சப்னம் தனது காதலுக்குக் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் இரவில் உறங்கச் செல்லுமுன் அவர்களுக்குப் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உறங்கியபின் காதலனுடன் சேர்ந்து கோடரியால் கழுத்தை வெட்டிக் கொன்றுள்ளார். தாய் தந்தை அண்ணன் அண்ணி அவர்களின் 10 மாதக் குழந்தை, தம்பி, தங்கை ஆகியோரைக் கொன்றுவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் சப்னத்துக்கும் அவள் காதலன் சலீமுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சப்னத்தின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் 12 வயது மகன் தனது தாய்க்காகக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளான்.சப்னத்தின் சார்பில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலிடம் மீண்டும் ஒரு கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சப்னம் தன் குடும்பத்தினரை கொலை செய்யும் போது கர்ப்பிணியாக இருந்தார். சிறையில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. மகனுக்கு முகமது தாஜ் என்று பெயர் சூட்டப்பட்டது. சிறையில் 6 வயதுக்கு மேல் மகன் சப்னத்துடன் இருக்க அனுமதியில்லை . இதனால், பத்திரிகையாளர் உஷ்மான் சஃபி என்பவர் முகமது தாஜை வளர்த்து வருகிறார். இவர், கல்லூரியில் படிக்கும் போது சப்னத்தின் ஜூனியர் ஆவார். அவ்வப்போது, தன் வளர்ப்பு தந்தையுடன் சிறைக்கு சென்று தன் தாயை முகமது தாஜ் கண்பது வழக்கம். அப்போதெல்லாம், 'தன் படிப்பை பற்றி தன் தயார் பற்றி ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொள்வார்' என்று சிறுவன் முகமது தாஜ் கூறுகிறான்.
இந்த நிலையில், சப்னத்தின் கருணைமனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்ததும், செய்தியாளர்களை சந்தித்த சிறுவன், 'தன் தாயார் தனக்கு தேவை என்றும் குடியரசுத் தலைவர் மாமா , என் தாயாரை தூக்கிலிட விட மாட்டார்' என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறான். முகமது தாஜின் வளர்ப்பு தந்தை உஷ்மான் சபி கூறுகையில், ''என் மகனை நல்ல மனிதனாக உருவாக்குவதே என் லட்சியம். அவனின் தாயார் எத்தகையை குற்றத்துக்காக இத்தனையை தண்டனை பெற்றாலும், அவரின் குழந்தையை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது '' என்று தெரிவித்துள்ளார்.