குரங்கு ஒன்று பெண்ணுடன் அமர்ந்து பொறுப்பாக காய்கறிகளை வெட்ட உதவி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குரங்குகள் பொதுவாக குறும்புகார விலங்குகளாக கருதப்படுகின்றன. குரங்கு கையில் பூமாலை கொடுப்பதுபோல் என்ற பழமொழி, அதனிடம் ஏதாவது கொடுத்தால் சிதறி சின்னாப்பின்னமாக்கிவிடும் என்பதற்காகவே உருவானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த வைரல் வீடியோ குரங்குகளைப் பற்றிய பொதுவான கருத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் அந்த வீடியோவில், குரங்கு ஒன்று பெண்ணுடன் அமர்ந்து காய்கறிகளை வெட்ட உதவி செய்து வருகிறது. மறு புறத்தில் இருக்கும் பெண்ணின் முகம் காட்டப்படாத நிலையில், எதிரில் அமர்ந்திருக்கும் அந்த குரங்கு பெண் தரும் காய்கறிகளை பாதியாக வெட்டி பாத்திரத்தில் போடுகிறது. இடைவிடாத வேகத்தில் நன்கு பயிற்சியளிக்கப்பட்டது போல் பொறுப்பாக காய்கறி வெட்டும் இந்த குரங்கு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவை ஐஆர்எஸ் அதிகாரியான அமன் ப்ரீத் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 170 க்கும் மேற்பட்ட ரீட்வீட்கள் பெற்றுள்ள இந்த வீடியோ இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.