நாட்டின் எல்லைகளை கடந்து கொரோனாவை முறியடிக்க ஒன்று கூடவேண்டும் என்று பிரதமர் மோடியின் அழைப்புக்கு பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
பத்து ஆசிய நாடுளின் சுகாதார அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய மோடி, கொரோனா பாதிப்பை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தியதால், உலகிலேயே மிகவும் குறைந்த இறப்பு எண்ணிககை கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உலகம் எங்கும் பயணிக்க அனுமதிக்கும் சிறப்பு விசாவை ஏற்படுத்தலாம் என்றும் மோடி யோசனை தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் ஆலோசித்து தடையற்ற விமான ஆம்புலன்ஸ் சேவைகளை தொடங்கும்படியும் மோடி கேட்டுக் கொண்டார்.
கொரோனாவைத் தடுக்கவும் இதுபோன்ற தொற்று நோய்களை ஆய்வு செய்யவும் அனைவரும் கூட்டாக இணைந்து செயல்படும் ஒரு மையத்தை ஏற்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.