புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி தலைமையிலான அரசு வரும் 22 ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் -திமுக கூட்டணி ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான் குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அக்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்தது.
3 திமுக எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என பேரவையில் கூட்டணியின் பலம் 14 ஆக உள்ளது.
எதிர்க்கட்சி தரப்பில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேர், அதிமுக ஏம்எல்ஏக்கள் 4 பேர், நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் என மொத்தம் 14 பேர் உள்ளனர்.
இதனை தொடர்ந்து சம பலத்துடன் இருப்பதால் அரசு பெரும்பான்மை இழந்ததாக கூறிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் பொறுப்பு ஏற்றுள்ள தமிழிசையிடம் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமியை அழைத்துப் பேசிய தமிழிசை, தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவருடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை முதலமைச்சர் நாராயணசாமி நிரூபிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே புதுச்சேரியில் எம்எல்.ஏக்களுடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாரயணசாமி, 22 ஆம் தேதி அன்று பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றார்.