நாட்டின் பல மாநிலங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி நவம்பர் 26 முதல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று நண்பகல் முதல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியானாவின் பால்வால் ரயில் நிலையத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அங்குப் பாதுகாப்புக்காகக் காவல் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மறியலையொட்டி ரயில் முன்கூட்டி நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
பீகாரில் பாட்னா ரயில் நிலையத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜன அதிகாரக் கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
காஷ்மீரில் ஜம்மு ரயில் நிலையத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் நடைபெற்றது. தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி முழக்கமிட்டனர். இதேபோல் பஞ்சாபிலும் உத்தரப் பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.