இந்தியாவின் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச்சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள அறிக்கையில், முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் மக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக்கொடியையே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வுகளுக்குப்பின் கொடிகளை தரையில் வீசிவிட்டு செல்லக்கூடாது என்றும், தேசியக்கொடிக்கு உரிய கண்ணியத்துடன் தனிப்பட்ட முறையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது இடத்தில் அல்லது மக்கள் முன்னிலையில் தேசியக்கொடியை எரித்தல், சிதைத்தல், அழித்தல் போன்ற அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும், தேசியகீதம் பாடுவதை ஒருவர் வேண்டுமென்றே தடுத்தால் அல்லது இடையூறு ஏற்படுத்தினால் 3 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.