ஆட்டோ ஓட்டுநரின் மகள் இந்தியாவின் இரண்டாவது பேரழியாக தேர்வான நிலையில் வறுமையிலும் சாதித்து காட்டிய அந்த அழகிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
விஎல்சிசி ஃபெமினா நடத்தும் மிஸ் இந்தியா 2020 அழகி போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளம்பெண்களில் டாப் அழகிகளாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் முதலிடத்தை பிடித்த தெலுங்கானாவை சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி மிஸ் இந்தியாவாக தேர்வானார். இதன் மூலம் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில் மானசா இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்த உள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடங்களை பிடித்து ரன்னர அப் -ஆக உத்திரபிரதேசத்தை சேர்ந்த மான்யா சிங் மற்றும் ஹரியானாவை சேர்ந்த மனிகா சிஷோகந்த் தேர்வாகியுள்ளனர்.
இதில் இரண்டாவது அழகியாக தேர்வான மான்யா சிங் ஆட்டோ ஓட்டுநரின் மகள். மிஸ் இந்தியாவாக தேர்வானதை தொடர்ந்து இந்த புகழை அடைய தான் கடந்து வந்த பாதையை மான்யா சிங் தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்து பலருக்கு நம்பிக்கையையும், மன உறுதியையும் அளித்துள்ளார். மான்யா சிங் உத்திரபிரதேசத்தின் குஷிநகரில் பிறந்துள்ளார். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பதால் வறுமையில் வசித்து வந்த மான்யா தனது குழந்தை பருவத்தை சந்தோஷமாக கடந்து வரவில்லை. பல நாட்கள் உணவும், உறக்கமும் இன்றி தவித்த மான்யா பள்ளிப்பருவத்தின் போது மாலை வேலைகளில் வீடுகளில் பாத்திரங்கள் கழுவும் வேலையையும், அதன் பின்னர் இரவில் கால் சென்டரிலும் பணியாற்றி தந்தைக்கு தோள்கொடுத்துள்ளார். மான்யாவின் படிப்பிற்காக நகைகளையும் அடகு வைத்துள்ளார் அவரது தாய். படிப்பிற்கு பிறகு வீட்டிலிருந்து வெளியேறிய மான்யா வேலைத்தேடி ஓடியுள்ளார்.
ஆட்டோ அல்லது ரிக் ஷாவில் பயணித்தால் செலவாகும் என்பதால் பல கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்று தான் செல்ல வேண்டிய இடத்தை அடைந்துள்ளார். எனினும் , அவரது மனதில் சாதிக்க வேண்டும் என்ற உறுதி மட்டும் அசைக்க முடியாதப்படி இருந்துள்ளது. ஒருப்பக்கம் வேலைப் பார்த்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தில் படித்த மான்யா, மற்றொருபுறம் சாதிக்க கருதி பேஷன் ஷோக்களில் கவனம் செலுத்தி வந்துள்ளார். தனது விடா முயற்சி மற்றும் மன உறுதி மூலம் இன்று சாதித்தும் காட்டியுள்ளார்.
வெற்றிக்கு பிறகு தனது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்துக் கொண்ட மான்யா, ”உங்களது கனவில் நீங்கள் உறுதியாக இருந்தால் இந்த உலகில் எதுவும் சாத்தியமே” என்று பெருமையுடன் கூறியுள்ளார். வறுமையை வென்று, இந்தியாவின் இரண்டாவது அழகியான மான்யாவுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்றே கூறலாம்.