மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பயணம் செய்வதற்கு அரசு விமானத்தை தர மாநில அரசு மறுத்து உள்ளது.
ஆளுநர் தமது சொந்த மாநிலமான உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு செல்ல மும்பை விமான நிலையத்திற்கு காலை சுமார் 10 மணி அளவில் புறப்பட்டு வந்தார்.
அரசுக்கு சொந்தமான சிறு விமானத்தில் அவர் ஏறி அமர்ந்த பின்னர், விமானத்தை இயக்க மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என விமானி கூறியதால், அதிலிருந்து இறங்கி மீண்டும் விமான நிலைய முனையத்தில் வந்து காத்திருந்தார். பின்னர் தனியார் விமானத்தில் நண்பகல் 12.15 மணிக்கு அவர் டேராடூன் புறப்பட்டுச் சென்றார்.
வழக்கமாக அரசு விமானத்தில் செல்ல ஆளுநர் யாருடைய அனுமதியையும் பெற தேவையில்லை. ஆனால் மாநில சிவசேனா கூட்டணி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உள்ள பனிப்போரால், அவரை மாநில அரசு அவமதித்து விட்டதாக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்ணவிஸ் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி உள்ளனர்.