கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் எமதர்ம ராஜா வேடத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கொரோனா நோய்த்தொற்று உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் காவல்துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோர் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர்.
பணிச் சுமையுடன் உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு, மக்களைக் காப்பாற்றக் களம் இறங்கிய முன்கள பணியாளர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 7௦ லட்சத்திற்கும் மேலான முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சிலர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சப்பட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து , மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், காவல்துறை அதிகாரி ஜவகர் சிங்க, எமதர்ம ராஜா வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
மருத்துவமனைக்கு கூலிங் கிளாஸ்சும், தலையில் கிரீடமும்,கருப்பு நிற சட்டையும் அணிந்து வந்த ஜவகர் சிங்க, கொரோனா தடுப்பூசி பற்றிக் கூறுகையில், முன்கள பணியாளர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே எமதர்ம ராஜா வேடத்தில் வந்ததாகவும் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஜவகர் சிங்க, எமதர்ம ராஜா வேடம் அணிந்து, காவல்துறை வாகனம் மேல் அமர்ந்து, மக்கள் அனைவர்க்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.