வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் எந்த மண்டியும் மூடப்படவில்லை, குறைந்தபட்ச ஆதார விலையும் நீக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, கடந்த சில ஆண்டுகளில் சிறு விவசாயிகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.
18 ஆம் நூற்றாண்டு மனநிலையுடன், வேளாண்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச சந்தை நிலவரங்களை அறிந்து, அதற்கு ஏற்ப வேளாண் உத்திகளை வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களும் முக்கியமானவை, அவசியமானவை என்பதால் தான் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
விவசாயிகள் மீது கொண்ட மதிப்பின் காரணமாகவே, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் அவர்களுடன் மூத்த மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் விளக்கம் அளித்தார்.
வேளாண் சட்டங்களால், சிறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகளும், நகரங்களில் விளைபொருட்களை விற்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின் எந்த விவசாய மண்டியும் மூடப்படவில்லை என்பதையும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை உயர்த்தப்பட்டு இருப்பதையும் மோடி சுட்டிக்காட்டினார்.
பிரதமர் பேசிக் கொண்டிருந்தபோது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
காங்கிரஸ் கட்சி, மக்களவையில் ஒரு விதமான நிலைப்பாட்டையும், மாநிலங்களவையில் வேறு விதமான நிலைப்பாட்டையும் எடுப்பதாக மோடி சாடினார். சுயமாக செயல்படவோ, அல்லது தேச பிரச்சனைகளை தீர்க்கவோ முடியாத பிளவுபட்ட, குழப்பான நிலையில் காங்கிரஸ் இருப்பதாகவும் பிரதமர் விமர்சித்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் உரையைப் புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.