உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்ததால், பெரும் பனிச்சரிவு ஏற்பட்டு தவுளிகங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
காணாமல் போன 197 பேரை பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கட்டுமானத்தில் இருந்த இரண்டு நீர்மின் திட்டங்கள் நீரால் அடித்துச் செல்லப்பட்டன.
நாட்டையே உலுக்கிய இந்தத் துயர சம்பவத்துக்கான சரியான காரணத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
காலநிலை மாற்றம் தான் காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் அணுசக்தி கருவிதான் இந்த பேரழிவுக்குக் காரணம் என்று உள்ளூர் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுமர் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. 1964 - ம் ஆண்டு சீனா முதன்முதலில் அணு குண்டு சோதனையை நடத்தியது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அந்த சோதனை கவலையடையச் செய்தது.
இந்த நிலையில், சீன அணுகுண்டு சோதனைகளை இந்தியா உதவியுடன் அமெரிக்கா வேவு பார்க்க நினைத்தது.
அதற்காக, இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய சிகரமான நந்தாதேவியின் மீது உளவுக் கருவியைப் பொருத்தினால் சீனாவை எளிதாகக் கண்காணிக்க முடியும் என்று அமெரிக்கா நினைத்தது.
இதையடுத்து அமெரிக்க சி.ஐ.ஏ உளவு அமைப்பும், இந்திய உளவு அமைப்பான ராவும் இணைந்து நந்தாதேவி சிகரத்தில் உளவுக் கருவியைப் பொருத்த முடிவு செய்தனர்.
ஆள் அரவம் இல்லாத நந்தாதேவி உயர்ந்த சிகரத்தில் உளவுக் கருவிகள் செயல்பட மின்சக்தி தேவை என்பதால், தொடர்ந்து இயங்கு அணுசக்தி கருவியைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, 1965 - ம் ஆண்டு உளவுக் கருவிகள், ஆண்டனா, அணு சக்தி ஜெனரேட்டர், புளூட்டோனியம் கேப்சூல் ஆகியவற்றுடன் ஒரு குழு நந்தா தேவி சிகரத்தை அடைந்தது.
ஆனால், அப்போது வீசிய கடுமையான பனிப்புயலால் உயிர் பிழைத்தால் போதும் என்று கருவிகளை சிகரத்தின் அடியிலேயே போட்டுவிட்டு வந்துவிட்டனர்.
அடுத்த ஆண்டு மீண்டும் சென்று தேடிப் பார்த்தபோது அணுசக்தி கருவிகள் காணவில்லை. ரகசிய திட்டம் என்பதால் இது குறித்த தகவல்கள் எதுவும் வெளியே தெரியவில்லை.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாக இருந்த இந்தத் திட்டம் 2018 - ம் ஆண்டுதான் வெளியே தெரிந்தது. இது குறித்து, உத்தரகாண்ட் அமைச்சர் ஒருவர், 1965 - ம் ஆண்டு கைவிடப்பட்ட அணுசக்தி பொருட்களால் கங்கை நதி மாசடைகிறது” என்று பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தான், சமோலி மாவட்டம், ஜூக்ஜூ (Jugju village) கிராம மக்கள், “பனிப்பாறைகள் உடைந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட அமெரிக்காவின் அணுசக்தி கருவிகள் தான் காரணம்.
பனிப்பாறைகள் உடைந்து வெள்ளெப்பெருக்கு ஏற்பட்ட போது மோசமாக துர்நாற்றம் ஏற்பட்டது. பிளாஸ்டிக் மற்றும் மற்ற கழிவுகளால் இந்த அளவுக்கு மோசமாக நாற்றம் வராது.
எங்களால் மூச்சுகூட விடமுடியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
கதிரியக்கத்தை ஏற்படுத்தும் அணுசக்தி சாதனத்தைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதே சமோலி மாவட்ட மக்களின் கோரிக்கையாக இருக்கிறது..!