18 வயதுக்கு குறைவாக இருந்தாலும், வயதுக்கு வந்து விட்டால், இஸ்லாமிய பெண்களுக்கு திருமணம் செய்து கொள்ள ஷரீயத் சட்டப்படி உரிமை உள்ளது என பஞ்சாப்,அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முகம்மதியன் சட்ட கொள்கைகளின் 195 ஆவது பிரிவின் படி, வயதுக்கு வந்துவிட்ட எந்த இஸ்லாமிய பெண்ணுக்கும், தாம் விரும்பிய நபருடன் திருமணம் செய்து கொள்ளும் உரிமை இருப்பதாக தீர்ப்பை அளித்த நீதிபதி அல்கா ஷெரின் தெரிவித்தார்.
வயதுக்கு வருவது என்பது 15 வயதாக கருதப்படுவதாகவும், அந்த வயதிலும் வயதுக்கு வராத பெண்களையும், மனவளர்ச்சி இல்லாத பெண்களையும் அவர்களின் சட்டபூர்வ காப்பாளர்கள் திருமணம் செய்து கொடுக்கலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களான பஞ்சாபை சேர்ந்த 36 வயது நபருக்கும் 17 வயது பெண்ணுக்கும் நடந்த திருமணத்தை குடும்பத்தினர் எதிர்ப்பது தொடர்பான வழக்கில் இந்த பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.