இமாச்சலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 57 சென்டிமீட்டர் பனி பொழிந்துள்ளது.
குளிர்காலத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சறுக்கு விளையாடவும், சிம்லா - கால்கா மலை ரயிலில் சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கவும் உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம்.
இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிடக் குளிரும் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. சிம்லாவில் நேற்று ஒரேநாளில் 57 சென்டிமீட்டர் பனி பொழிந்துள்ளது. 1991ஆம் ஆண்டு ஒருநாளில் 54 சென்டிமீட்டர் பனி பொழிந்ததே இதற்கு முன் அதிக அளவாக இருந்தது.
சாலை, தரை, மலைமுகடு, மரங்கள், கூரைகள், வாகனங்களின் மேற்பரப்பு ஆகிய அனைத்தும் பனி மூடி வெண்மையாகக் காட்சியளிக்கிறது. கடுங்குளிரை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் தரையில் உறைந்த பனிக்கட்டிகளை அள்ளி வீசி விளையாடி மகிழ்ந்தனர்.