விவசாயிகள் மூன்று மணி நேரச் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதையொட்டி டெல்லியில் காவல்துறை, துணைராணுவப் படை வீரர்கள் ஐம்பதாயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் இன்று பிற்பகல் மூன்றுமணிநேரம் சாலை மறியல் நடத்த உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக டெல்லியைச் சுற்றி எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி ஏந்திய காவல்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வன்முறையாளர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
கூர்முனை கொண்ட இரும்புக் கம்பிகளைச் சாலையில் பதித்துள்ளதுடன், முட்கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆளில்லா விமானங்களில் கேமராக்களைப் பொருத்தியும் கண்காணிக்கப்படுகிறது.