விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட கருத்துகளை அடுத்து கடந்த குடியரசு தினத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தை அமெரிக்காவின் நாடாளுமன்ற முற்றுகைச் சம்பவத்துடன் ஒப்பிட்டு மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது.
விவசாயிகளுடனான பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியிருந்தது. அமைதியான போராட்டங்களை அனுமதிக்க வேண்டும், இணைய சேவைகளை முடக்கக் கூடாது என்றும் அமெரிக்கா கோரியுள்ளது.
இதற்கு பதிலளித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விவசாயிகளுடனான முரண்பாட்டை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதற்கு மத்திய அரசு திறந்த மனத்துடன் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே மாதிரியான ஜனநாயக வேறுபாடுகளை கொண்டிருக்கும் நாடுகள் என்று சுட்டிக் காட்டியுள்ள இந்திய வெளியுறவுத்துறை ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகைப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையை குடியரசு தினத்தில் டெல்லியில் நிகழ்ந்த வன்முறையுடன் ஒப்பிட்டு பதில் அளித்துள்ளது.