இந்திய அரசு தனது நாட்டு மக்களையும், இறையாண்மையையும் எந்த விலை கொடுத்தும் காக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் விமான கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு முனைகளில் இருந்தும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்களும், சவால்களும் விடுக்கப்படுகிறது என்றார்.
ஒரு அரசால் தூண்டிவிடப்பட்ட, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்ற அவர், இப்போது அதே பயங்கரவாதம் உலகிற்கே அச்சுறுத்தலாக மாறி உள்ளது என்றார்.
இன்னமும் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத நிலையில், எல்லை நிலவரத்தை தன்னிச்சையாக மாற்றும் போக்கை இந்தியா தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார். அது போன்ற எந்த ஒரு அசம்பாவிதங்கள் குறித்து நாடு விழிப்புடன் இருப்பதோடு, அதனை முறியடித்து வெல்லும் சக்தியை கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறிய அவர், தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ், நவீன ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.
சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த 7 அல்லது 8 ஆண்டுகளில் இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இப்போது உலகம் வேகமாக மாறி வருவதாக கூறிய அவர்,புதிய இந்தியாவுக்காக புதிய லட்சியங்களை அரசு கொண்டுள்ளது என்றார்.