இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அளிக்கக்கோரி நடிகர் யாஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். இது, இந்திய அளவில் பிரம்மாண்டமான வசூல் சாதனைப் படைத்தது. கன்னட சினிமாவில் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் யாஷ்க்கு கேஜிஎப் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கியது.
தற்போது, இந்த படத்தின் 2 ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் வெளிவரும் மிக பிரமாண்டமான பட்ஜெட் படங்களுள் ஒன்று கேஜிஎப் - சாப்டர் 2. முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீநிதி ரெட்டி, வில்லனாக சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா தண்டன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 7 ம் தேதி கேஜிஎப் - 2 படத்தின் டீசர் வெளியானது முதல் யூடியூபில் பல்வேறு சாதனைகளைப் படைத்தது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற இந்திய பட டீசர் என்ற சாதனையை தன் வசம் ஈர்த்தது கேஜிஎப் 2. தற்போது வரை 16 கோடிக்கு மேலான பார்வைகளை டீசர் பெற்று அசத்தியுள்ளது. இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 16ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர்.
இந்த நிலையில் கேஜிஎப் 2 படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அளிக்கக்கோரி நடிகர் யாஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில், ’கேஜிஎப் 2 திரைப்படம் ஜூலை 16 ம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தைக் காண மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே படம் வெளியாகும் அன்று நாடு முழுவதும் தேசிய விடுமுறை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கேஜிஎப் திரைப்படம் எங்களுக்கு வெறும் படம் மட்டுமல்ல. எங்கள் உணர்வு” என்று உணர்ச்சி பொங்க பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைவர்கள் பிறந்தநாள், கலாச்சார விழாக்கள் போன்ற நாட்டின் முக்கிய நிகழ்வுகளை கொண்டாட தேசிய விடுமுறை அறிவிக்கக் கோருவது வழக்கம். ஆனால் ஒரு படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் தேசிய விடுமுறை அளிக்க பிரதமரிடம் கடிதம் எழுதியிருப்பது வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.