டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் நகருக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க இரும்பு ஆணி தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.
கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினம் அன்று டெல்லிக்குள் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது.
இதன் பின்னணியில்,திக்ரி, சிங்கு மற்றும் காசிபூரில் சாலைகளுக்கு குறுக்கே இரும்பு ஆணி தடுப்புகளையும், கான்கிரீட் தடுப்புகளையும் போலீசார் அமைத்துள்ளனர்.
குறிப்பாக திக்ரியில், போராட்ட களத்தில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் சாலைகளில் முதலில் இரண்டு அடுக்கு இரும்பு தடுப்புகளும் அதைத் தொடர்ந்து இரண்டு கான்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கான்கிரீட் தடுப்புகளுக்கு இடையே சிமென்ட் கலவை போடப்பட்டு விவசாயிகள் நகருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி மக்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.