தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, 10 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது, தனிநபர் வருமான வரம்பில் மாற்றங்கள் இல்லை என்றாலும், 75 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, வருமான வரியிலிருந்து, மத்திய அரசு சலுகை அறிவித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்மூலம், தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.
தங்கம் இறக்குமதிக்கு, தற்போது உள்ள 12 புள்ளி 5 விழுக்காடு சுங்க வரியை, 2019ஆம் ஆண்டில் இருந்ததுபோல், 10 விழுக்காடு அளவிற்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உறுதியளித்தார்.
உள்நாட்டில் பருத்தி விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி 10 சதவிகிதமும், மூலப்பட்டு மற்றும் பட்டுநூல் இறக்குமதி வரி 15 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறால், அலங்கார வகை மீன்கள், பண்ணை வளர்ப்பு மீன்கள் ஆகியனவற்றின் இறக்குமதி உணவுகள் மீதான வரி 15 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலணி, கைப்பை உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட தோலுக்கான சுங்கவரி 10 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
மொபைல் உதிரிபாகங்கள், சார்ஜர்கள் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரி விலக்கு வாபஸ் பெறப்பட்டு, இரண்டரை விழுக்காடு அளவிற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
நெகிழி கழிவுகளை தடுக்கும் விதமாக, மொபைல் போன்கள், கேமிராக்கள், கணினிகள், சார்ஜர், அடாப்டர், ஆகியவற்றுக்கு 2 புள்ளி 5லிருந்து, 15 விழுக்காடு வரையில் சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. ஏசி கம்ப்ரசர் இறக்குமதி 15 சதவிகிதமும், சோலார் இன்வெர்டர் இறக்குமதி வரி 20 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஆப்பிள்கள் மீதான சுங்கவரி 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களுக்கு 50 விழுக்காடும், பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றிற்கும் இறக்குமதிக்கு 15 விழுக்காடாகவும் சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
யூரியா, பாஸ்பேட், டிஏபி ஆகிய உரங்களின் இறக்குமதிக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காப்பர் ஸ்கிராப் எனப்படும் செப்பு கழிவுகள் மீதான சுங்க வரி 2.5 சதவீதமாக, பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. என்ஜின் உதிரிபாகம், வாகன பாதுகாப்பு கண்ணாடி உள்ளிட்ட குறிப்பிட்ட சில வாகன உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு ஸ்டீல் மறுசுழற்சியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஸ்க்ரூ, நட்டுகள் ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.