ஆன்லைனில் சர்வதேச மாநாடுகள், பயிற்சிகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்த அரசின் முன் அனுமதி அவசியம் என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதே நேரம், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான எந்த நிகழ்வையும் ஆன்லைனில் நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு, அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள், மத்திய-மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆன்லைனில் சர்வதேச நிகழ்வுகளை நடத்த விரும்பும் நிறுவனங்களும், அமைப்புகளும் சம்பந்தப்பட்ட அமைச்சக செயலரிடம் முன் அனுமதியை பெறுதல் கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.