எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தத் தேசிய மாணவர் படையினர் ஒரு லட்சம் பேருக்கு முப்படையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தேசிய மாணவர் படையின் கலைக்குழுவினர் நடத்திய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருந்தன.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புயல் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது தேசிய மாணவர் படையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததை நினைவுகூர்ந்தார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் அரசுடனும், சமுதாயத்துடனும் இணைந்து செயல்பட்டது பாராட்டத் தக்கது எனக் குறிப்பிட்டார்.
தேசிய மாணவர் படையின் பங்கை மேலும் விரிவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், எல்லைப்பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் தேசிய மாணவர் படையின் பங்களிப்புடன் பாதுகாப்பை வலுப்படுத்த ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார்.
இதற்காக ஒரு லட்சம் மாணவர்களுக்கு முப்படைகளால் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இத்தகைய பயிற்சி பெறுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் மாணவியர் என்றும் குறிப்பிட்டார்.