மனைவி தன்னை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்றதால், பெண்களை குறி வைத்து கொன்றதாக ஆந்திராவில் 18 பெண்களை கொன்றவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
ஊமை விழிகள் படத்தில் தன்னை விட்டு காதலி பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்ததால், நடிகர் ரவிச்சந்திரன் பெண்கள் மீது வன்மம் கொண்டு அவர்களை கடத்தி சென்று கொலை செய்வது போன்று கதை களம் அமைந்திருக்கும். தற்போது, ஆந்திராவில் அதே போன்று உண்மை சம்பவம் நடந்துள்ளது.
ஹைதரபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த வெங்டம்மா என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் , கட்கேசர் என்ற பகுதியில் உள்ள ஆள் அரவமில்லாத பகுதியில் முகம் எரிக்கப்பட்டு கொலையாகி கிடந்தார். அந்த பெண்ணின் உடல் அருகே அவரின் செல்போனும் கிடந்தது. சி.சி.டி.டி கேமராக்களை ஆய்வு செய்த போது, ஆண் ஒருவருடன் வெங்டம்மா ஆட்டோவில் வந்து இறங்கியது தெரிய வந்தது. வெங்டம்மாவுடன் வந்தது ராமுலு என்ற 45 வயது நபர் என்பது தெரிய வந்தது. வெங்கடம்மா போலவே முகம் எரிக்கப்பட்ட நிலையில், சித்திபேட் மாவட்டத்திலுள்ள முலுகு என்ற இடத்தில் மற்றோரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து, ராமுலுவை போலீஸார் தேடி வந்தனர். இரு தினங்களுக்கு முன் போரபந்தா இடத்திலுள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில், தன்னை விட்டு மனைவி பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டதால் பெண்களை கொலை செய்ததாக ராமுலு கூறியுள்ளான். இந்த ராமுலு மீது 21 வழக்குகள் உள்ளன. ராமுலு மொத்தம் 18 பெண்களை கொலை செய்துள்ளான். சைபராபாத்தில் 13 பேரையும் ஹைதரபாத்தில் 3 கொலைகளையும் மேடக் பகுதியில் 2 பெண்களையும் கொலை செய்துள்ளான். கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த கொலை ஒன்றில் ராமுலுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மனநல சிகிச்சைக்காக எர்ரகண்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பி விட்டான். ராமுலு மீண்டும் கைது செய்யப்பட்டாலும், அந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டான். பின்னர், மீண்டும் பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடிப்பதை ராமுலு வழக்கமாக வைத்திருந்துள்ளான்.
சைபராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சானி குமார் கூறுகையில், சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராமுலுவுக்கு 21 வயதான போது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். மனைவி வேறு ஒருவருடன் சென்று விட்டார். அந்த ஆத்திரத்தில் குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை குறி வைத்து கொலை செய்துள்ளான். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 16 கொலைகளை செய்துள்ளான். தற்போது, இரண்டு கொலைகள் செய்து பிடிபட்டுள்ளான்'' என்றார்.