நாட்டின் 72வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மறைந்த வீரர்களின் நினைவாக போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து குடியரசு தின விழா நடைபெறும் ராஜபத்துக்கு வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் அணிவகுப்பை குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். 45 ஆண்டுகளில் முதன்முறையாக வெளிநாட்டு விருந்தினர் இல்லாமல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் பங்கேற்போர் கொரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
விஜய் சவுக்கில் இருந்து தொடங்கும் அணிவகுப்பு நேஷனல் ஸ்டேடியம் வரையும், அலங்கார ஊர்திகள் செங்கோட்டை வரையும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் படை பலத்தையும், கலாசார செழுமையையும் உலகுக்கு பறை சாற்றும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெறும். முதல் முறையாக ரபேல் போர் விமானம் அணிவகுப்பில் இடம் பெறுகிறது. முப்படை வீரர்கள், வங்காள தேச ராணுவத்தினர், டி.ஆர்டி.ஓ வின் பாதுகாப்பு அணிவகுப்பு என பலவித அம்சங்களுடன் இந்தப் பேரணி நடைபெற உள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின விழா முடியும் வரை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.