குடியரசு தினவிழா கொண்டாட்டங்களை ஒட்டி நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தினவிழாவை கொண்டாட நாடு தயாராகி வருகிறது.கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 40,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள அணிவகுப்பிலும் முன் எப்போதும் இல்லாத மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக விழாவில் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க அனுமதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. அவர்களின் 4000 பேர் பொதுமக்கள். பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் சுமார் ஒன்றரை மீட்டர் இடைவெளி விட்டு அமர வைக்கப்படுவார்கள் என்றும், வழக்கமாக அமைக்கபடும் 38 பார்வையாளர் மாடங்களுக்கு பதில் இந்த முறை 22 மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அழைப்பிதழ் இருப்போருக்கு மட்டுமே அனுமதி என்றும், ஒவ்வொருவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்திய பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதே போன்று ராணுவ அணிவகுப்பிலும் இந்த ஆண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக 8.5 கி.மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் அணிவகுப்பு இந்த ஆண்டு 3.5 கிலோ மீட்டர் தூரமாக குறைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக விமான சாசக நிகழ்ச்சிகளில் ரபேல் விமானங்கள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு முதல் முறையாக விமான சாகச நிகழ்ச்சியில் பெண் விமானிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அமரும் மாடத்தில் இந்த முறை அவருடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர் 100 பேர் அணிவகுப்பை பார்வையிட உள்ளனர்.
1966 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த ஆண்டில் தான் வெளிநாட்டு சிறப்பு விருந்தினர் இன்றி குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ளது. 15 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்பதால், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இந்த ஆண்டு முதல் முறையாக அனுமதி இல்லை.
முதல் முறையாக 122 பேரை கொண்ட வங்க தேசத்தின் முப்படையின் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய கடற் போர் விமானங்கள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை முதல் முறையாக அணிவகுப்பில் இடம் பெற உள்ளன. அணிவகுப்பை நின்று கொண்டு பார்வையிட பார்வையாளர்களுக்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள், பங்கேற்போர் என அனைவருக்கும் முக கவசம் கட்டாயம், அலங்கார ஊர்திகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு, அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியிலும் வழக்கமான 144 வீரர்களுக்கு பதில் 96 பேருக்கு மட்டுமே அனுமதி, குடியரசு தினத்திற்கு பின்னர் ஒருவாரம் நடைபெறும் பாரத் பார்வ் நிகழ்ச்சி ரத்து, படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் வழக்கமான 25,000 பார்வையாளர்களுக்கு பதில் 4000 பேருக்கு அனுமதி என பல முதல் முறை நடவடிக்கைகள் இந்த குடியரசு தின விழாவுக்காக எடுக்கப்பட்டுள்ளன.