குடியரசு நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தக் காவல்துறை அனுமதித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நவம்பர் 26 முதல் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு நாளில் டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காவல்துறையே முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்து விட்டது. இந்நிலையில் சிங்கு, திக்ரி, காசிப்பூர், பால்வால், சாஜகான்பூர் ஆகிய 5 இடங்கள் வழியாக டிராக்டர்களில் செல்வது என்றும், மொத்தம் நூறு கிலோமீட்டர் தொலைவுக்குப் பேரணி நடத்துவது என்றும் விவசாயிகள் முடிவு செய்து காவல்துறையிடம் அனுமதி கோரினர்.
அமைதியான முறையில் பேரணியை நடத்திக்கொள்ளலாம் என்றும், பேரணி முடிந்ததும் வந்த வழியாக விவசாயிகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் கூறிக் காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.