இந்திய - சீனா எல்லைப்பிரச்சினையைத் தீர்க்க ராணுவத் தளபதிகள் இடையிலான 9 வது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று சீன எல்லைப்பகுதியில் நடைபெற இருக்கிறது.
லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவம் இடையே ஏற்கனவே 8 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள போதும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இந்த நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் எல்லைப்பிரச்சினை குறித்து 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்திய ராணுவ உயரதிகாரிகள் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பிஜிகே மேனன் தலைமையில் எல்லையைத் தாண்டி சீனாவின் மால்டோ பகுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். லடாக் எல்லையில் சீனா குவித்துள்ள படைகளை கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலைக்கு திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இது தவிர புதிதாக படைகளைக் குவிக்கக் கூடாது என்றும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற எட்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இந்தியா வலியுறுத்தியுள்ளது. இன்று பேச்சுவார்த்தையில் மீண்டும் படைகளை திரும்பப்பெறவும் புதிய படைகளைக் குவிக்காமல் தடுக்கவும் இந்திய ராணுவ அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர். இதற்கு சீனா ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் களத்தில் நிற்கும் சீனப்படைகள் முழுவதுமாக திரும்பப்பெறாமல் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதால், எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழலையும் இறுக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் ராணுவ பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் இறையாண்மையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் சீனாவுக்கு திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.