அமெரிக்காவின் ப்ராங்க்ளின் டெம்பிள்டன் அசட் மேனேஜ்மெண்ட் எனும் நிதி நிறுவனம், இந்தியாவில் மியூட்சுவல் பண்ட் என அழைக்கப்படும் பரஸ்பர நிதி திட்டங்களை வழங்கி வந்தது.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள், இந்த பரஸ்பர நிதிய திட்டங்களில் முதலீடு செய்திருந்தனர். இந் நிறுவனம் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி, எவ் வித முன்னறிவிப்பின்றி 6 பரஸ்பர நிதிய திட்டங்களை முடித்துக் கொண்டதாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.
இதனால், சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்த 3 லட்சத்து 15 ஆயிரத்து 621 முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மோசடி புகாரில் சிக்கிய அமெரிக்க நிதி நிறுவனம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி, கோவை பிரேம்நாத் சங்கர் என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமெரிக்க நிதி நிறுவனத்தின் மோசடிகளை பட்டியலிட்டு, வாதிட்டார் . கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி இருவரும் இந் நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக நடித்து வருவது, மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் அமைந்ததாகவும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு DGP - க்கு உத்தரவிட்டனர்.