ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்துவது எனக் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்துத் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். அதன்பின் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழுவில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது முதலில் தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்பது என்றும், அதன்பின் ஜூனில் கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.