கர்நாடகத்தின் தும்கூரில் அரசு அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக நடிக்கவில்லை என்றும், உண்மையிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தும்கூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட நலவாழ்வு அதிகாரி நாகேந்திரப்பா, அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ரஜனி ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது போல் பொய்யாகப் படம் பிடித்துக் கொண்டதாகக் கூறிச் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்தது.
இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தும்கூர் மாவட்ட ஆட்சியர் ராகேஷ் குமார், இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட போது ஊடகத்தினர் படம்பிடிக்கத் தவறிவிட்டதாகவும், அதனால் தடுப்பூசி போட்டது போல் மீண்டும் தோன்றும்படி ஊடகச் செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டதால் அவ்வாறு செய்ததாகவும், இதனை படம் பிடித்து சிலர் தவறான நோக்கத்தில் பரப்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.