ஏழைகளுக்குத் தொண்டாற்றுவதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர். எனப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
8 ரயில்களின் போக்குவரத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, எம்ஜிஆர் பிறந்த நாளில் அவர் பெயரைக் கொண்ட நிலையத்தில் இருந்து புதிய ரயில் இயக்கப்படுவது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.
ஏழைகளுக்குத் தொண்டாற்றுவதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் எம்ஜிஆர் எனப் புகழாரம் சூட்டினார். ரயில் போக்குவரத்துத் தொடர்பு, ஒற்றுமைச் சிலையைச் சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கான வசதி மட்டுமல்லாமல், கேவாடியாவில் உள்ள பழங்குடியினரின் வாழ்வையும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.
இதனால் சொந்தத் தொழில் தொடங்குவது அதிகரித்துப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் குறிப்பிட்டார். ரயில்வேயின் வரலாற்றிலேயே நாட்டின் பல பகுதிகளில் இருந்து பல ரயில்கள் ஒரே இடத்துக்குச் செல்வது இதுவே முதன்முறை எனத் தெரிவித்தார். அமெரிக்காவின் சுதந்திர தேவிச் சிலைக்கு வருவதைவிட ஒற்றுமைச் சிலைக்கு அதிக அளவில் பார்வையாளர்கள் வருவதாகவும், இதனால் அதிகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களில் ஒன்றாகக் கேவாடியா உருவாகும் எனத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் கேவாடியாவுக்கு வந்து செல்வர் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளதாக மோடி குறிப்பிட்டார். நர்மதைப் பகுதிக்குக் குறுகிய ரயில்பாதை இருந்தபோது தான் பலமுறை ரயிலில் சென்றுள்ளதை நினைவுகூர்ந்த மோடி, அந்தக் காலத்தில் ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் எப்போது வேண்டுமானாலும் ஏறி இறங்கிச் செல்லும் அளவுக்கு ரயில் மெதுவாகச் செல்லும் எனக் குறிப்பிட்டார்.
ரயிலில் இருந்து இறங்கி நடக்கும் ஒருவர் சில சமயங்களில் ரயிலைவிட வேகமாக நடந்து செல்வதைக் காணலாம் என்றும் நகைச் சுவையாகக் குறிப்பிட்டார். அத்தகைய குறுகிய பாதை இப்போது அகலப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.