கர்நாடகத்தில் 12 உயிர்த்தோழிகள் ஒரே விபத்தில் பலியான சம்பவம் கடும் அதிர்ச்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தவனகரேயில் உள்ள செயின்ட் பவுல்ஸ் பள்ளியில் படித்தவர் டாக்டர். வீணா மற்றும் ப்ரீத்தி ரவிக்குமார். இவர்களுடன் படித்த மேலும் 15 பேர் நன்கு படித்து நல்ல வேலையில் வெவ்வேறு ஊர்களில் பணி புரிந்து வருகின்றனர். தோழிகள் அனைவருக்கும் 35 முதல் 40 வயதுக்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், பள்ளி காலத்தில் தொடங்கிய நட்பை இன்று வரை தோழிகள் தொடர்ந்து வந்துள்ளனர். வருடத்துக்கு ஒரு முறை விடுமுறை நாள்களில் 17 தோழிகளும் ஒன்று கூடி சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
அந்த வகையில், மகா சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு 17 தோழிகளும் கோவாவுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளனர். இதற்காக, டெம்போ டிராவல்லரில் 15 ஆம் தேதி அதிகாலை கோவா நோக்கி புறப்பட்டனர். புறப்படும் முன் வேனில் வைத்து தோழிகள் அனைவரும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். காலை 7 மணியளவில் ஹூப்ளி நகரை தாண்டி தோழிகள் சென்ற டெம்போ டிராவல்லர் தார்வாட் நகரிலிருந்து 8 கிலோ மீட்டருக்கு முன்னதாக இட்டிகட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர் பக்கத்தில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி நிலை தடுமாறி ரோடு டிவைடரை தாண்டி வந்து டிராவல்லர் வேன் மீது மோதியது. இதில், வேன் உருகுலைந்து போக சம்பவ இடத்திலேயே டாக்டர். வீணா உள்ளிட்ட 12 தோழிகள் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் பரிதாபமாக இறந்து போனார்கள். டெம்போ டிராவல்லர் வேன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார்.
காயமடைந்தவர்கள் தார்வாட் மருத்துவமனையிலும் ஒருவர் பெங்களுருவில் உள்ள மணிபால் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் லாரியின் ஓட்டுநரும் மருத்துவமனையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான ப்ரீத்தி ரவிக்குமார் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ குரு சித்தனகவுடாவின் மருமகள் ஆவார். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். '' கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் சாலை விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதில் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த சோகமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமாக பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி ட்விட் செய்துள்ர். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தோழிகள் 12 பேர் உயிரிழந்தது தவணகரே பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.