கேரளாவின் இரு புறங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், கே ரயில் என்றும் அதிவேக ரயில்பாதை அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 4 மணி நேரத்தில் சென்று விட முடியும்.
கர்நாடக மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள காசர்கோடு நகரத்திலிருந்து திருவனந்தபுரம் வரை சுமார் 531 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. சாதாரணமாக. இந்த தொலைவை கடக்க 12 மணி நேரமாகும். அதிவேக ரயில்கள் கூட சராசரியாக 45 கிலோமீட்டர் வேகத்தில்தான் இந்த பாதையில் இயக்கப்படுகிறது. இதனால், சில்வர்லைன் பாதை என்றும் கே - ரயில் என்றும் அழைக்கப்படும் ஹை செமி ஸ்பீடு ரயில் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2009 ஆம் ஆண்டு கேரள அரசு முடிவெடுத்தது. தற்போது, இந்த பாதைக்கான பணிகள் தொடங்கும் நிலையை எட்டியுள்ளது .மத்திய ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து கேரள அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தப்படுகிறது. இந்த ரயில் பாதை நிறைவேற்றப்பட்டால், காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்கு 4 மணி நேரத்தில் சென்று விடலாம்.
மேலும், கோழிக்கோட்டிலிருந்து கொச்சிக்கு ஒரு மணி நேரத்திலும் கொச்சியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஒன்றரை மணி நேரத்திலும் சென்று விட முடியும். மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில் இடையில் கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், திரூர், திருச்சூர், கொச்சி விமான நிலையம்,எர்ணாகுளம், கோட்டயம் , செங்கானூர், கொல்லம் என 9 ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். இந்த திட்டத்துக்காக ரூ.56,443 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத்தைச் சேர்ந்த GeoKno India நிறுவனம் முதல் கட்டமாக ஆகாயவழி சர்வேயை முடித்து விட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரயில்வே அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்காக அறிக்கை அனுப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறப்பட்டதும் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ளது போல மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முக்கியத்தும் கொடுத்து ரயில் பெட்டிகளும் ரயில் நிலையங்களும் கட்டப்படுகின்றன. வீல்சேரை ரயிலில் ஏற்றிச் செல்லும் வகையில் பெட்டிகளில் வாயில் கதவு அகலமாக அமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்த ரயில் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்காக 9,000 கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. நிலம் கையகப்படுத்த மட்டும் ரூ.13,256 கோடி கட்டட ங்கள் மறு சீரமைப்புக்கு ரூ.4,460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் நடைபெறும் போது, 50, 000 வேலை வாய்ப்புகள் உருவாகும். சுமார், 10, 000 பேர் வரை வேலை வாய்ப்பை பெறுவார்கள். கே ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கேரளாவில் சாலை விபத்துகள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளவில் 41 ஆயிரம் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில், 4,440 பேர் இறந்துள்ளனர். 45 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். கே ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சாலையிலிருந்து தினமும் 5,00 டிரக்குகள் மற்றும் 18 ஆயிரம் கார்கள் அகற்றப்படும் என்கிறார்கள்.