வங்கி மோசடி வழக்குகளில் விசாரணையை தாமதப்படுத்த லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தலைமையகம் உள்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் கடன் பெற்று திருப்பித் தராமல் சிக்கியுள்ளன. இந்த வழக்குகளை மூடிமறைப்பதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சில சிபிஐ அதிகாரிகளையே குற்றம் சாட்டியுள்ள சிபிஐயின் லஞ்ச ஒழிப்புத்துறை தனது தலைமையகத்திலேயே சோதனை நடத்தியுள்ளது. டெல்லி, குர்கான்,நொய்டா, மீரட், கான்புர்., காசியாபாத் உள்பட 14 இடங்களில் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் சி.பி.ஐ. அலுவலகங்களில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் காசியாபாத் சிபிஐயில் டி.எஸ்பியாக பணிபுரியும் ஆர்.கே.ரிஷி, இன்னொரு டி.எஸ்.பியான சங்க்வான், இன்ஸ்பெக்டர் கபில் தன்வந்த், ஸ்டெனோவாக பணிபுரியும் சமீர் குமார் சிங் ஆகிய 4 சிபிஐ அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.சி. ஜோஷி தெரிவித்துள்ளார். அவர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்தல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொள்ள லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.