கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக திகழும் இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக்- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் AstraZeneca நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கோவீ ஷீல்டு தடுப்பு மருந்து ஆகியவற்றை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதியளித்தது.
இதைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து 2 கட்டங்களாக ஒத்திகையும் விரிவாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை 16ம் தேதி தொடங்குவது என்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கர்நாடக மாநிலத்தில் 2 இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைப்பதன் மூலம், நாடு முழுவதும் அத்திட்டத்தை மோடி தொடங்கி வைக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் முறைப்படி அத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது அவர், தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.