கங்கை நதியில் வாழும் அழகிய டால்பினை கொன்ற கயவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் இனங்களில் டால்பின்கள் மிக சாதுவானவை. மனிதர்களுடன் நெருங்கிப் பழகுபவை. பல இடங்களில் மக்களை மகிழ்விக்கும் வேலைகளில் கூட டால்பின்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடல்களில் மட்டுமல்லாமல் நதிகளிலும் டால்பின்கள் வாழ்கின்றன. கங்கை, மற்றும் சிந்து நதிகளில் அரிய வகை டால்பின் இனங்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த 31 - ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள சாரதா கால்வாயில் அரிய வகை கங்கை நதி டால்பின் ஒன்று தென்பட்டுள்ளது. இந்த டால்பினை கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அதை துடிக்க துடிக்க கம்பை வைத்து அடித்தும் கோடாரியை வைத்து வெட்டிக் கொன்றுள்ளனர். பிறகு, கால்வாய் ஓரம் போட்டு விட்டு ஓடி விட்டனர். கால்வாய் ஓரம் டால்பின் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி டால்பினை இளைஞர்கள் கொல்லும் வீடியோவை வெளியிட்ட வனத்துறை அதிகாரி ரதேஷ் பாண்டே , '' இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கங்கை நதி டால்பினை உள்ளூர்வாசிகள் சாதாரண மீன் என்று கருதி கொன்றுள்ளனர். இது ஒரு அரியவகை அழிந்து வரும் இனம் என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை.வனவிலங்குகள், அரிய வகை விலங்குகள் பற்றி இன்னும் விழிப்புணர்வு தேவை '' என்று வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரியவகை கங்கை நதி டால்பின்களை பாதுகாக்க தனி திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.