டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வழக்கமாகக் காணப்படும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏதுமின்றி, மக்கள் அமைதியாக புத்தாண்டை வரவேற்றனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் நேற்றிரவு மின்விளக்குகளால் ஜொலித்தது. இங்கு ஏராளமான சீக்கியர்கள் இரவு நேர வழிபாடுகளில் கலந்துக் கொண்டு புத்தாண்டை ஆன்மீக அனுபவமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்
டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆயினும் தனி நபர் நடமாட்டம் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இரவு நேர ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதே போன்று மும்பையில் ஜூகு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டதால் கடற்கரையை ஒட்டிய சாலைகளை மூடி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளில் புத்தாண்டைக் கொண்டாட திரண்ட மக்களுக்கு போலீசார் முகக்கவசங்களை விநியோகம் செய்து இடைவெளியைக் கடைபிடிக்கும் படி கேட்டுக் கொண்டனர்.
பெங்களூரில் மக்கள் திரளாகக் கூடும் எம்.ஜி .சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மக்கள் பொது இடங்களில் புத்தாண்டைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டதால் சாலைகள் இரவு பத்து மணிக்கு மேல் வெறிச்சோடின.