பதான்கோட் தாக்குதலைப் போன்று புத்தாண்டு தினத்தன்று பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கங்களான ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆகியவை இந்தியாவில் மிகப் பெரும் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறைக்கு, உளவுத்துறை அனுப்பியுள்ள குறிப்பில், பதான்கோட்டில் நடந்த தாக்குதல் போன்று பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் சர்வதேச எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவக்கூடும் எனவும், புத்தாண்டு தினத்தன்று இந்தத் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர், ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா போன்ற இயக்கங்களை இணைக்க முயற்சித்து வருவதாகவும், இதன்மூலம் ஒருங்கிணைந்த பெரும் தாக்குதலில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஷாகர்கர் என்ற இடத்தில் இருந்து இவ்விரு அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதான்கோட்டில் உள்ள பமியல் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னேற்பாடாக பாகிஸ்தானின் நரோவல் பகுதியில் இருந்து பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் வரை ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் ஆயுதங்களைப் போடுவதற்கும், பின்னர் அதனை காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று நாசவேலைகளுக்கு பயன்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு அமைப்புகள் உஷார்நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.