இந்திய தயாரிப்பு பொருள்கள் உலகத் தரமானதாக அமைவதை தொழில் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலியின் மன்கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் உரை நிகழ்த்தினார். இது அவரது 72ஆவது மாதாந்திர மன்கீ பாத் நிகழ்ச்சியாகும். மேலும் இந்தாண்டில் அவரது கடைசி மன்கீ பாத் நிகழ்ச்சியாகும்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, உள்நாட்டு தயாரிப்பு மூலம் உள்நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்போம் என்ற முழக்கம் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்டார். உற்பத்தியாளர்களும், தொழில் நிறுவன தலைவர்களும் தங்களது தயாரிப்பு பொருள்கள் உலக தரமானதாக இருப்பதை உறுதி செய்ய நேரம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகிலேயே சிறந்த பொருள்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்ற அவர், இதற்காக தொழில்முனைவோரும், புத்தாக்க முனைவோரும் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பொருள்கள் பயன்பாட்டில் இந்திய மக்கள் மனநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், பொம்மைகளில் கூட இந்திய தயாரிப்பையே கேட்டு வாங்குதாகவும் கூறிய மோடி, இந்த மாற்றத்தால் அடுத்த ஓராண்டில் ஏற்படும் விளைவுகளை பொருளாதார நிபுணர்களாலும் மதிப்பீடு செய்ய இயலாது என்றார்.
மக்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் எது வெளிநாட்டு தயாரிப்பு பொருள் என்பதை கண்டறிந்து, அதற்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்றும், இந்தியர்களின் கடின உழைப்பில் தயாரான இந்திய பொருள்களை பயன்படுத்துவோம் என்று உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா பரவல் காலத்தில் உலகம் முழுவதும் விநியோக அமைப்பு முறை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறிய பிரதமர், ஆனால் ஒவ்வொரு பிரச்னைகளில் இருந்தும் இந்தியா புதிய படிப்பினைகளை கற்றுக் கொண்டதாகவும், புதிய திறன்களை உருவாக்கி கொண்டதாகவும் தெரிவித்தார். இந்த திறனைதான் ஆத்மநிர்பார் அல்லது சுய சார்பு என்று நாம் அழைக்கிறோம் என்றும் மோடி கூறினார்.