உத்தரப்பிரதேசத்தில் சாதிப்பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டிய வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையைப் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.
அண்மைக்காலமாக வாகனங்களின் கண்ணாடிகளிலும், பதிவெண் பலகைகளிலும் யாதவ், ஜாட், குர்ஜார், பிராமணர், பண்டிட், சத்ரியர், தாக்கூர் எனச் சாதிப்பெயரைப் பொறிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
இத்தகைய வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையைப் பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின்படி உத்தரப்பிரதேசப் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.
வாகனங்களில் சாதிப்பெயர்களைக் குறிப்பிடுவது சமூகங்களிடையே உள்ள இணக்கத்தைக் குலைக்கும் வகையில் உள்ளதாகக் கூறிப் பிரதமர் அலுவலகத்துக்கு மகாராஷ்டிர ஆசிரியர் ஹர்சால் பிரபு கடிதம் எழுதியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.