பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று 40 விவசாய சங்கங்கள் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய அரசின் முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 32வது நாளாக டெல்லி-ஹரியானா எல்லையான சிங்கூவில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புதல் அளித்த விவசாயிகள் நான்கு அம்ச பிரகடனத்தை மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும், அடிப்படை ஆதார விலையை உறுதி செய்து சட்டமியற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.